(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை திரிபுப்படுத்தியதாக கூறப்படும் பாடகி உமாரா சிங்கவன்சவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (02) பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வினவியிருந்தார்.
இது தொடர்பில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதோடு, குறித்த பாடலை பாடிய பாடகி உமாரா சிங்கவன்சவை இன்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் மேலதிக செயலாளரும் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளரும் மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாகவும், அரசியலமைப்பு மீறல் இடம்பெற்றுள்ளதா? என்பதை கண்டறியவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த விசாரணையில், தேசிய கீதத்தின் ராகம், பாடுதல், சொற்களஞ்சியம் குறித்து சரியான புரிதல் பெறுவதற்காக கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் விசாரணைக் குழுவிற்கு அழைக்கப்பட்டதாகவும், இந்த விசாரணை முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட அறிக்கை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்க தயாராக உள்ளது அதன் பின்னர் சட்டமா அதிபர் ஆலோசனை பெறப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (01) தெரிவித்துள்ளார்.