NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

NSL போட்டிகளில் சம்பியனானது தம்புள்ள அணி

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் காலி அணியை 75 ஓட்டங்களால் வீழ்த்தி மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணி சம்பியனாக மகுடம் சூடியது.காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அபிஷேக் லியனாரச்சி அரைச் சதம் கடந்து பெற்றுக் கொண்ட அரைச் சதம் (54) மற்றும் அணித்தலைவர் மினோத் பானுகவின் அரைச் சதம் (50) என்பவற்றின் உதவியுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைக் குவித்தது. தம்புள்ள அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 58 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், கவிஷ்க அன்ஜுல 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி, 53.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை எடுத்தது.அந்த அணிக்காக பின்வரிசையில் களமிறங்கி துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பெதும் குமார அரைச் சதம் கடந்து 78 ஓட்டங்களையும், சுமந்த லக்ஷான் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.தம்புள்ள அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹஸரங்க 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு சமரகோன் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சொனால் தினூஷ 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து 61 ஓட்டங்கள் முன்னிலையோடு தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ள அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பலம்சேர்த்த 22 வயது இளம் வீரரான சொனால் தினூஷ, 59 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.காலி அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மொஹமட் சிராஸ் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அசங்க மனோஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனையடுத்து 257 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்களை எடுத்து காணப்பட்டது.இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்று (05) 5 விக்கெட்டுகள் கைவசமிருக்க 165 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய காலி அணி, வனிந்து ஹஸரங்க மற்றும் லஹிரு சமரகோனின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 182 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.

இதன்படி, 75 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தம்புள்ள அணி 2023 தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் சம்பியனாக மகுடம் சூடியது.இந்த நிலையில், தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் சம்பியனாகிய தம்புள்ள அணிக்கு 50 இலட்சம் ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பிடித்த காலி அணிக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.இந்த நிலையில், நான்கு போட்டிகள், 7 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 448 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 2ஆவது இடத்தைப் பிடித்த கண்டி அணியைச் சேர்ந்த 21 வயது இளம் வீரர் அஹான் விக்ரமசிங்க, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
இதனிடையே, சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை ஜப்னா அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் சஷிக துல்ஷான் வென்றார். 3 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.இதேவேளை, காலி அணிக்காக ஆடிய ரமேஷ் மெண்டிஸ் தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles