NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் 2026” மோட்டார் வாகன பந்தயத் தொடர்

இலங்கையின் மோட்டார் வாகன விளையாட்டுத் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘BETSS.COM ஸ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் 2026’ மோட்டார் வாகன பந்தயத் தொடர் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஸ்ரீ லங்கா மோட்டார் பந்தய ஓட்டுநர்கள் மற்றும் சவாரி செய்பவர்கள் சங்கம் (SLARDAR) வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள DIMO 800 கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் அனுசரணையாளர்கள், ஊடக பங்காளர்கள் மற்றும் பந்தய வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை பந்தய ஓட்டுநர்கள் மற்றும் சவாரி செய்பவர்கள் அமைப்பினால் 9ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் இந்த சூப்பர் சீரிஸ் தொடரானது, நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மோட்டார் விளையாட்டு சம்பியன்ஷிப்பாகக் கருதப்படுகிறது. கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இந்தத் தொடர், பல்வேறு சவாலான பந்தயத் திடல்களில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் இறுதியில் நாட்டின் சிறந்த வாகன பந்தய வீரர் மற்றும் மோட்டார் சைக்கிள் வீரருக்கு மகுடம் சூட்டப்படவுள்ளது.

இது குறித்து இலங்கை பந்தய ஓட்டுநர்கள் மற்றும் சவாரி செய்பவர்கள் அமைப்பின் தலைவர் பிரசான் விஜயநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய மோட்டார் விளையாட்டு நாட்காட்டியில் இத்தொடர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அனுசரணையாளர்களின் பேராதரவுடன் 2026ஆம் ஆண்டு தொடர் புதிய உச்சங்களைத் தொடும்,” என நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த ஆண்டுக்கான சம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்கனவே பெப்ரவரி மாதம் கிரியுல்லவில் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 05 – 06: நுவரெலியா, மே 09 – 10 வெலிசறை ஜூன் 27 – 28 குருணாகல் ஒக்டோபர் 17 – 18 கிரியுல்ல ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது

Share:

Related Articles