(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கைக்கு அப்பால் கடலில் தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றுமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
1,000க்கும் அதிகமான இந்த கொள்கலன்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் இவை அதிக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கர்த்தினால் தெரிவித்துள்ளார்.
தோடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவை மூடிமறைக்க யாரோ ஒருவர் 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகவும், அது குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஒரு சக்தி வாய்ந்த அமைச்சர் கூறியுள்ளார். எனவே விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு நினைவூட்டுவது என்னுடைய கடமை.
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள், நாட்டை முன்னேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட ஏனைய நாடுகளில் இருந்து அனைத்தும் இறக்குமதி செய்யப்படுவதால் நாட்டில் உற்பத்தி நடைபெறுவதில்லை.
நெல் விவசாயிகள் நாட்டிற்குத் தேவையான போதுமான இருப்புக்களை உற்பத்தி செய்ய உதவுவதுடன், கடலை முழுமையாகப் பயன்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு உதவ வேண்டும். நாட்டின் தோல்விக்கு ஆளும் கட்சியை மட்டும் குறைக் கூறவில்லை, எதிர்க்கட்சிகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு பொறுப்பானவர்களுக்கு தாம் சவால் விடுவதாக கூறியுள்ள அவர், தேர்தலின் போது சபையில் உள்ள 225 உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.