(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆஷஸ் மற்றும் ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்களின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்கு அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேலும் 174 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
போட்டியின் கடைசி நாளான இன்று (20) இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே வெற்றியிலக்கை அடைய முடியும்.
டேவிட் வோர்னரும் உஸ்மான் கவாஜாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர்.
டேவிட் வோர்னர், மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா சற்று நிலைக்குலைந்தது.
எவ்வாறாயினும், உஸ்மான் கவாஜாவும் இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்ட்டும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மேலும் விக்கெட்கள் சரிவதைத் தடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
போட்டியின் 4ஆம் நாளான நேற்று (19) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் 273 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோ ரூட், ஹெரி ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ரொபின்சன் ஆகிய நால்வர் 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.