குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ் பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்படுவதாக திம்புலாகல மானம்பிட்டிய பிரதேசத்திலிருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
மானம்பிட்டி கிராம சேவகர் அலுவலகத்தில் நேற்று (22) குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான விநியோகம் இடம்பெற்றதுடன், பத்து கிலோ அரிசி வழங்க வேண்டுமாயின் நூறு ரூபாயை கொண்டு வருமாறு கிராம சங்க உறுப்பினர்கள் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அறிவித்துள்ளனர்.
அரிசி பெறவரும் போது அந்தத் தொகையைக் கொடுக்கத் தவறியவர்களுக்கு அரிசி கிடைக்காதென கூறிப்பிட்டுள்ளனர்.
சமுர்த்தி கிராம சங்கத்தின் தலைவர் ஜி.பி. துஷாரியிடம் தொலைபேசியில் நடத்திய விசாரணையில், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களை மகிழ்விக்க இவ்வளவு தொகை வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
பின்னர், திம்புலாகலை பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீனிடம் தொலைபேசி மூலம் நடத்திய விசாரணையில், இவ்வாறு அரிசி வழங்கும் போது பணம் வசூலிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் வசூலிக்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.