உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம் என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேற்படி துரித திட்டத்தின் கீழ் வடக்கு , கிழக்கு உள்ளிட்ட பிற மாகாணங்களிலும், மருந்தகங்கள் இல்லாத ஏனைய மாவட்டங்களிலும் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டம் ஏற்கனவே உரிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிறுவப்பட்ட முதலாவதும் பழமையானதுமான கொழும்பு 7 இல் உள்ள அரச மருந்தகத்தின் 51 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம் என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நாட்களாக, அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களுக்கு அரச மருந்தகங்களை அமைத்து தருமாறு பொதுமக்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கமைய மேற்படி விசேட வேலைத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, மருந்து விநியோகத்தில் ஏற்படக்கூடிய தவறுகளை தவிர்த்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.