NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகளாவிய ரீதியில் புகையிலை பயன்பாடு வீழ்ச்சி!

உலகளாவிய ரீதியில் புகையிலை பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

2000ஆம் ஆண்டு மூன்றில் ஒருவர் புகைப்பிடிப்பவராக இருந்த நிலையில், தற்போது குறித்த தொகையானது ஐந்தில் ஒருவராக குறைவடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் புகையிலை கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், மனநிறைவு அடையும் வகையில் இல்லை என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சுகாதார மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் ரூடிகேர் க்ரேஷ் (Ruediger Krech) தெரிவித்துள்ளார்.

அத்துடன், புகையிலைத் தொழில் எண்ணற்ற உயிர்களை பலிகொடுத்து இலாபத்தை ஈட்டுவதனை கண்டு தாம் வியப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டில் 1.36 பில்லியனாக இருந்த 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பாவனையாளர்கள் தற்போது 1.25 பில்லியனாக குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2030 ஆம் ஆண்டில் உலக சனத்தொகை அதிகரிக்கப்படுகின்ற போதிலும் புகையிலை பயன்படுத்துவோர் தொகை 1.2 பில்லியனாக குறைவடையும் என ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புகைபிடிப்போர் அதிகம் காணப்படுவதாகவும், சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் புகைத்தல் பழக்கம் கொண்டவர்கள் எனவும் உலக சுகாதர ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எகிப்து, ஜோர்தான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் புகையிலை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலகளாவிய ரீதியில் சுமார் 362 மில்லியன் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles