NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிம்புலாவல சாலையோர வியாபார நிலையங்களை அகற்றுமாறு பணிப்பு!

கிம்புலாவல வீதியோர உணவு விற்பனை நிலையங்களை வெள்ளிக்கிழமைக்குள் (08) அகற்றி இடத்தை காலி செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள போதிலும், குறித்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கான தீர்மானத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை என கிம்புலாவல வீதியோர உணவு விற்பனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அனுமதியின்றி, வீதியோரங்களில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து, முன்னதாக ஆகஸ்ட் மாதம், கிம்புலாவல வீதியோர உணவு விற்பனையாளர்களை 14 நாட்களுக்குள் தங்கள் கடைகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை கேட்டுக்கொண்டது.  

இந்த நடமாடும் வீதியோர உணவு விற்பனையாளர்களால் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்கள் குறித்து நாளாந்தம் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் வலியுறுத்தியது.

ஆனால் பின்னர் உணவு விற்பனையாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் வீதியோர உணவு விற்பனைக்கு உடன்பாடு எட்டப்பட்டு அவர்களின் வியாபாரத்தை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கியது.

அந்த நேரத்தில், விற்பனையாளர்கள் கடைகளை பிரதான சாலையில் இருந்து சற்று பின்னோக்கி நகர்த்த ஒப்புக்கொண்டனர், ஆனால் சில கடைகள் இன்னும் வீதியோரத்தில் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில், கடந்த வாரம் கொட்டாவ மற்றும் தலவத்துகொட பிரதேசங்களில் நிறுவப்பட்ட வீதியோர உணவு விற்பனை நிலையங்களில் சோதனைகளை மேற்கொண்ட பொது சுகாதார பரிசோதகர்கள், 14 உணவு விற்பனை நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 06 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

Share:

Related Articles