நாளையும் நாளை மறுதினமும் கைதிகளை பார்வையிட அதிகளவானோர் வரக்கூடும் என்பதால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவினால் அனைத்து சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் உரிய பணிப்புரை விடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பொலிஸாருடன் இணைந்து இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளையும் நத்தார் பண்டிகையான நாளைமறுதினமும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட வாய்ப்பளிக்க சந்தர்ப்பமளிக்கப்படவுள்ளது.
சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கைதிக்கு தேவையான உணவை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர முடியும் என்பதுடன் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.