(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்கள் குவித்ததுடன் 13 பந்தில் அரை சதம் அடித்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கருத்து தெரிவித்திருந்த போது, மைதானத்துக்குள் சென்று நன்றாக விளையாட வேண்டும் என்று என் மனதில் எப்போதும் இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். செயல்முறை மிகவும் முக்கியம். கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன். ரன் ரேட்டை உயர்த்த விரும்பினேன். சதத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இதுபோன்று நடப்பது இயல்பு. சஞ்சு சாம்சன் என்னிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். சிறந்த வீரர்களுடனும் விளையாடுவது பாக்கியம். இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல் ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்றார்.