புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் தேர்வு முறையிலோ அல்லது சாதாரணதர மற்றும் உயர்தர பாடத்திட்டங்களிலோ எவ்வித மாற்றமும் முன்னெடுக்கப்பட மாட்டாது என தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய நவீன உலகத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான நேரம் தேவைப்படும்.
இந்நிலையில், இந்த சீர்திருத்தங்கள், ஒரே நேரத்தில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டால், ஒரு பெரிய நெருக்கடி நிலை உருவாகும்.
எனவே, பாடத்திட்டம் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டு தரம் ஒன்று முதல் அறிமுகப்படுத்தப்படும்.
அதேவேளை, தற்போது 10, 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பாடத்திட்டங்களில் முன்னெடுக்க வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் நடந்து வரும் நிலையில், அதன்படி, 8 வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தைப் புதுப்பிக்கும் முறை வழக்கம் போல் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.