NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூடான் உள்நாட்டு போர் காரணமாக இதுவரை 31 இலட்சம் பேர் புலம்பெயர்வு – ஐ.நா தகவல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 31 இலட்சம் பேர் புலம் பெயர்ந்து தவித்து வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் நலப் பிரிவு தெரிவித்துள்ளதாவது, சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேல் நடைபெற்று வரும் மோதல் காரணமாக, 31 இலட்சம் பேர் தங்களது இருப்பிடங்களைவிட்டு வெளியேறியுள்ளனர்.

புலம் பெயர்ந்தவர்களில் 7.38 இலட்சம் பேர் சர்வதேச அகதிகளாகியுள்ளனர். அவர்கள், அண்டை நாடுகளான எகிப்து, சாட் போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

எகிப்தில்தான் அதிகபட்சமாக 2,55,500 பேர் சூடான் மோதலுக்கு அஞ்சி தஞ்சமடைந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சாடில் 2.38 இலட்சம் பேரும், தெற்கு சூடானில் 1.61 இலட்சம் பேரும் தஞ்சமடைந்துள்ளதாக என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அப்தெல் ஃபட்டா அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 3000 – 5000 பேர் வரை உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles