NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு!

மன்னார் சதோச மனித புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி ஆகியவை தொடர்பான  வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் (09) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

முதலில் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சட்டத்தரணிகளான, ரனித்தா ஞானராஜ் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி சிவலிங்கம் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். 

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் , மன்னார் பொலிஸார் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். இதன்போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

76 இலக்கம் தொடக்கம் 156 வரையிலான 80 பெட்டிகள் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக பகுப்பாய்விற்கு மன்னார் நீதவான் நீதி மன்றத்தினால் கையளிக்கப்பட்டது. மிகுதி 75 எலும்புக்கூட்டு பெட்டிகள் இன்று (10) கையளிக்கப்படும்.

இவை பகுப்பாய்வு செய்யப்பட்டு இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். கையளிக்கப்பட்டுள்ள ‘சதோச’ மனித புதைகுழி எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரியினால் இறப்புக்கான காரணம், வயது, பால் நிலை போன்ற விடயங்களையும் இறப்பு ஏற்பட்டமைக்கான காரணங்களும் மன்றில் சமர்பிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் சில தினங்களில் மன்றில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் வெள்ளிக்கிழமை இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை இடம்பெற்றது. இதன்போது கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அவர்களினால் ஏற்கனவே பகுப்பாய்வு செய்யப்பட்ட 81 மனித எச்சங்களில் 27 மனித எச்சங்களுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மரணத்திற்கான காரணம், வயது, பால் நிலை போன்ற காரணங்கள் குறித்த 27 மனித உடலங்களுக்கான அறிக்கைகள் மன்றில் கையளிக்கப்பட்டுள்ளன.

மிகுதி மனித எச்சங்களுக்கான அறிக்கை 6 மாத காலத்தில் மன்றில் கையளிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles