NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து..!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

காலி, எல்பிட்டிய, எல்ல, இராஜாபிஷேகராம வரலாற்று சிறப்பு மிக்க புராதன விகாரையின் ஸ்ரீமஹா போதியின் மரக்கன்று நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒரு நாடாக, நாம் பொருளாதார வீழ்ச்சியில் இருப்பதாகவும், அந்த வீழ்ச்சியில் இருந்து நாம் வெளியே வர வேண்டும் எனவும் நாட்டு மக்கள் ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்பை மனதில் கொண்டு ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளர்.

நாட்டினது முன்னோக்கிய அபிவிருத்தியில் கிராமங்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும் இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கு சவாலாக உள்ள நிலையில், 220 இலட்சம் மக்களின் நலனுக்காக உழைப்பது அனைவரினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் வேளையில், மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்கள் மீதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதால், புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அரிசி தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் அரிசியின்றி நிர்க்கதியாக இருக்கும் தருணத்தில், தமது விளை பொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகளும் தற்போது நிர்க்கதி நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே, விவசாயிகளை பாதுகாத்து கொண்டு நுகர்வோரையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் முன்வைத்த தேர்தல் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தருணம் தாராளமாக கிடைத்துள்ளதால், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles