கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு பிரான்ஸின் பொது சுகாதார பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு முன்னதாக பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 5,114 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,728 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
காச நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை பிரான்ஸ் பரிந்துரைத்துள்ள போதிலும், அனைத்து மக்களும் கட்டாயம் தடுப்பூசி பெறவேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.
பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஐரோப்பாவை நோக்கி அகதிகள் புலம்பெயர்வது உள்ளிட்ட சில விடயங்கள் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்த 118,000 பேரில் 10 வீதமானவர்களுக்கு மாத்திரம் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, 2030 ஆம் ஆண்டளவில் காசநோய் தொற்றுநோயை இல்லாதொழிப்பதே ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் ஒன்றாக கருதப்படுகிறது.