தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ரகுல்பிரீத் சிங். தடையற தாக்க, என்னமோ ஏதோ மற்றும் விரைவில் திரைக்கு வர உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், “நான் கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடுகிறேன். அதோடு மாஸ் மசாலா கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் விருப்பம் உள்ளது. ஒவ்வொரு படத்திலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சவாலான வேடங்களை ஏற்று நடிக்க காத்து இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்தியில் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க மட்டுமே எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் மிகச்சிறந்த கமர்சியல் கதையில் நடிக்கவும் வாய்ப்பு வரவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன். என் நடிப்புக்கு சவால் விடும்படியான ஒரு கதாபாத்திரம் இன்னும் எனக்கு அமையவில்லை. அதற்காகவும் நான் காத்திருக்கிறேன்” என்றார்.