தென்னிந்திய சினிமாவில் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமாக இருந்து வருவது “AVM Prodection”. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இந்த நிறுவனம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டுடியோவில் AVM “Heritage Museum” உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பழைய மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறிய திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்ப கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காட்சிக்காக வைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த மியூசியத்தில் நடிகர் அஜித்தின் பைக் இடம்பெற்றுள்ளது. அதாவது, ‘திருப்பதி’ படத்தில் அஜித் பயன்படுத்திய (பஜாஜ் பல்சர் 180சிசி 2004) பைக்கை மியூசியத்தில் இணைத்துள்ளதாக ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. திருப்பதி படத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.