தமிழ் சினிமாவில் ‘பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம்’ போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக தடம் பதித்தவர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் தற்போது ‘பகாசூரன்’ திரைப்படம் ஆனது வெளியாகி இருக்கின்றது. செல்வராகவன், நாட்டி நடராஜ் உட்பட பல திரைப் பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் இதோ
யூ ட்யூபில் கிரைம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ரிட்டயர் ஆர்மி மேனாக நடித்துள்ள நட்டி நட்ராஜ். திடீரென அவரது சொந்த அண்ணன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரும் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி போலீஸ் அந்தக் கேஸை முடிக்கிறது.இதன் பின்னர் நட்டி நடராஜனின் கைக்கு ரம்யாவின் மொபைல் போன் கிடைக்கின்றது. இதன் தன்னுடைய அண்ணன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட விடயமும், திருமணம் செய்து கொண்டாலும் இந்த தொழிலில் நீ ஈடுபட வேண்டும் என ஒருவர் போனில் மிரட்டிய விஷயமும் தெரிய வருகின்றது. இதனைத் தொடர்ந்து தனது அண்ணன் மகளை மிரட்டிய அந்த மர்ம கும்பலை தேடிச் செல்கிறார்.
அந்த மிரட்டும் நபர் யார் என்று தேடுகையில், பல பெண்கள் பண கஷ்டத்தினால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், நட்ராஜன் இதன் மூலமாக அறிந்து கொள்கிறார்.இதேபோன்று மறுபக்கம் பீமராசுவாக நடித்துள்ள செல்வராகவன் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவோரையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்போரையும் தேடித்தேடி கொல்கிறார். வேறு வேறு கதையில் பயணிக்கும் நட்டி நட்ராஜ் மற்றும் செல்வராகவன் என இருவரும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இதன் பின்னர் நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் உடைய மீதிக் கதை.பகாசூரன் பட இயக்குநர் மோகன் ஜியின் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக கூறப்படுவது, அவரது போர் அடிக்காத திரைக்கதைதான். அவர் கதையை நேர்த்தியாக கொண்டு போன விதமும் பலரை வியக்க வைத்துள்ளது.
இப்படத்தில் பீமராசுவான செல்வராகவனுக்கு ஒரு கண் கலங்க வைக்கும் பிளாஷ்பேக் இருக்கிறது. அதாவது பாசமான அப்பாவாக, நாச வேலைகள் ஈடுபடும் கும்பலை கொள்ளும் கொடூர கோபக்காரனாக தன்னுடைய மாறுபட்ட நடிப்பை கொடுத்து மக்கள் மத்தியில் ஆணித்தனமாக இடம் பிடித்துள்ளார்.அதாவது முதல் காட்சியிலேயே ஒருவரை சரமாறியாக போட்டுத்தள்ளும் செல்வராகவன், அடுத்த சீனில் நெற்றி நிறைய பட்டையும் கழுத்தில் ருத்திராட்ச கொட்டயுமாக வருகிறார். ஆரம்பிக்கையில் அவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை என்றாலும், படம் முடிந்து எழுந்து செல்கையில் மனம் முழுவதும் அவர்தான் இருக்கிறார். அந்தவகையில் தனது மகளின் சாவிற்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளும் நேரத்தில் கொடூரமான பீமராசுவிற்கும், ஃப்ளாஷ்பேக்கில் அன்பான அப்பாவாக சாந்தமான பீமராசுவையும் நன்கு வித்தியாசப்படுத்தி பார்க்க முடிகிறது.
அத்தோடு மகளை இழந்து கலங்கும் காட்சியிலும், தன் மகளைப் போல யாரும் இறக்கக்கூடாது என அவர் பலரை துவம்சம் செய்யும் காட்சியிலும் ரசிகர்கள் அனைவரையும் ஆட்கொண்டு விடுகிறார். மேலும் நட்டி நடராஜ் தன்னுடைய கதாபாத்திரத்தை அழுத்தமான நடிப்பின் மூலம் பலம் சேர்த்துள்ளார்.அதேபோல் சாம் சி எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.அதேபோன்று இப்படத்தினுடைய பலவீனம் என்று பார்க்கும் போது, இயக்குநர் மோகன் ஜி செல்போனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்து அழுத்தமாக இந்த படத்தில் பேசியுள்ளார். ஆனாலும் அதற்கான தீர்வுகளை சொல்ல மறந்து விட்டார். அத்தோடு பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும் பாடல்கள் மிகவும் பலவீனமாகவே உள்ளன.
இந்த டிஜிட்டல் யுகத்தை எடுத்துக் கொண்டால் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில் பழைய பெருசுகள் உளருவதைப் போல “எல்லாப் பிரச்சனையும் இந்த போன்லதான் வருது” என்று கூறும் கருத்தை சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளனர். அதாவது பெண்கள், வீடியோ காலில் தங்களது காதலரிடம் அந்தரங்கமாக பேசுவதையும், காதலருடன் முத்தத்தை பரிமாறிக்கொள்வதையும் கூட, “தப்பு தப்பு தல மேல கொட்டு” என்பதைப் போல படத்தில் முற்றுமுழுதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக பார்த்தால் தனது காதலருக்கு முத்தம் கொடுத்ததை வீடியோ எடுத்த சிலர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக செல்வராகவனின் மகள் தனது தந்தையிடம் வந்து கூறுவார். அப்போது, “பெரிய தப்பு பன்னிட்டேன் பா..” என்று கூறி கதறி அழுவார். அந்த நேரத்தில் செல்வராகவன், “அழாதம்மா, கண்ணு ராஜாத்தி” என்று கூறுவாரே தவிர “நீ செய்ததில் ஒன்றும் தவறில்லை” என்று ஒரு வார்த்தையைக் கூட கூறமாட்டார். இதனைப் போல இப்படத்தில் பல ஓட்டைகள் இருந்தன. அதையெல்லாம் பூசி மொழுகக் கூட இயக்குநர் எந்த விதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எல்லா காட்சியிலும், பெண்கள் நம்பி ஒருவனிடம் தங்களின் உடலைக் காட்டுவதையும், முத்தம் கொடுப்பதையும் குறை சொல்கிறார்களே அன்றி, அவர்கள் குறித்து வீடியோ வெளியிடும் நபர்களை ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை.
அத்தோடு செல்போனால் வரும் பிரச்சனைகளை கூறிவிட்டு அதை கையாள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி பேசியிருந்தால் இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், வெகுஜன மக்களைப் போல “எல்லாமே மொபைல் போனாலதான்” என்ற கருத்தையே இந்த படத்திலும் திணிக்க முயற்சித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.
இருப்பினும் பெண்களை பாலியல் தொழிலில் எப்படி சிக்கவைக்கின்றனர் என்று அவர் கூறிய விதத்தை மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம். எது எவ்வாறாயினும் மொத்தத்தில் செல்வராகவனுக்காக வேண்டுமானால் பகாசூரனைப் பார்க்கலாமே தவிர மற்றபடி சொல்லிக் கொள்வதற்கு இப்படத்தில் ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.