NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கை!

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறையின் சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு போதுமான காலவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் விடுமுறை வழங்கும் முறைமையை அறிவித்துள்ளதுடன், தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்கள் வாக்களிக்க செல்வதற்கு கட்டாயம் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, அரச சேவையாளர்கள் வாக்களிப்பதற்கு தாபன விதிக்கோவைக்கமைய போதுமான விடுமுறை வழங்க வேண்டும் எனவும், தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்க வேண்டியது தொழில் மற்றும் சேவை வழங்குநரின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார்.

இதற்கமைய வாக்களிப்பதற்கு 40 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு அரைநாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியவர்களுக்கு ஒரு நாள் விடுமுறையும், வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 100 முதல் 150 கிலோமீற்றர் பயணிக்க வேண்டியவர்களுக்கு ஒன்றரைநாள் விடுமுறையும், 150 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணிக்க வேண்டிவர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தலில் வாக்களிக்க இடையூறு விளைவிக்காத வகையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய தொழில் வழங்குனர்கள் தமது ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles