அரசாங்க மருத்துவமனைகளின் சிகிச்சை மற்றும் மருந்து வழங்கல் சேவைகள் எதிர்வரும் வாரங்களில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளது.
தற்போதைய ஓய்வூதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் 60 வயதை கடந்த பெருமளவான வைத்தியர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளனர்.
மறுபுறத்தில், மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் போதுமான நிதி ஒதுக்கப்படாமை காரணமாகவும் அரசாங்க மருத்துவமனைகளின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர்களின் பணி வயது 60 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதால், இருநூறு விசேட மருத்துவ நிபுணர்கள், இருநூறு பொது மருத்துவர்கள், அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் 250, 50 பல் மருத்துவர்கள் ஆகியோர் இம்மாதம் 30 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களில் 650 பேர் பிராந்திய மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருவதாகவும், இவர்களில் சுமார் 350 பேர் இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளமையினால் அந்த மருத்துவமனைகளை தொடர்ந்தும் இயக்குவது பெரும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பயிற்சியை நிறைவு செய்த சுமார் 1400 வைத்தியர்களுக்கு கடந்த ஏப்ரலில் பயிற்சியின் பின்னரான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், சுமார் 300 வைத்தியர்களுக்கு நியமனக் கடிதங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அறியமுடிகின்றது.
குறித்த நியமனத்தை ஏற்காத பலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.