NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூபா முப்பது இலட்சம் நன்கொடை..!

இலங்கையின் வடக்கு – கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. 

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் துணைத்தூதுவர் ஶ்ரீ சாய்முரளி இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உதவித் தொகைக்கான காசோலையைக் கையளித்தார். 

இந்தியத் தூதரகத்தின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதித் துணைத் தூதுவர் ஶ்ரீ கே. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், அதிகாரிகள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், பயன்பெறும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles