NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேமலு திரைப்படம் எப்படி?

மலையாளத்தில் வெளியான ’பிரேமம்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இப்போ சத்யம் தியேட்டரில் போட்டாலும் அந்த படத்தை பார்க்க தனிக் கூட்டமே வரும். அப்படியிருக்கும் நிலையில், மலையாள படத்திற்கு ’லு’ போட்டு ‘பிரேமலு’ என தலைப்பை ஏன் வைத்தனர் என்கிற கேள்வியில் தொடங்கி ரசிகர்களை இந்த படம் எப்படி ஈர்த்து 100 கோடி வசூல் படமாக மாறியது என்கிற அனைத்து கேள்விக்கும் ‘பிரேமலு’ படம் அழகாக விளக்கமளித்து விடுகிறது.

இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த பிப்ரவரி 9ம் திகதி மலையாளத்தில் வெளியான இந்த படம் இன்று மார்ச் 15ம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் கல்லூரியில் படிக்கும் போது காதல் தோல்வியை சந்திக்கும் சச்சின் (நஸ்லென்) வெளிநாட்டுக்கு செல்ல ஆசைப்படுகிறான். ஆனால், அதிலும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதன் பின்னர் தனது நண்பனுடன் இணைந்து ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் ‘கேட்’ எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணலாம் என சேர்கிறான். ஆனால், அதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை. அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் ஹீரோ ஹீரோயின் மமிதா பைஜு “கிரேஸி ஃபிராக்” பாடலுக்கு நடனமாடுவதை பார்த்து அவர் மீது பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார். இனிமேல் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்வது தான் தனது லட்சியம் என நினைக்கும் அவருக்கு ஹீரோயின் மமிதா பைஜுவின் கனவு கணவனுக்கான ஒரு தகுதியும் இல்லை என தெரிய வந்து அங்கேயும் பல்பு வாங்குகிறார். அதன் பின்னர் அவர் ஹீரோயினுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதை காமெடி கலந்த காதல் படமாக இயக்கி இளைஞர்களை கவர்ந்துள்ளனர்.

மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களையே இந்த படத்தின் மூலம் மமிதா பைஜு கவர்ந்துள்ளார். விரைவில் தமிழிலும் இவர் ரசிகர்களை வசீகரிக்க காத்திருக்கிறார். சாதாரண புளித்துப் போன திரைக்கதையையும் ஃபிரெஷ்ஷாக ரசிக்கும் படி கொடுத்து ஹிட் ஆக்க முடியும் என கிரிஷ் ஏ.டி. திரைக்கதையில் பண்ண மேஜிக் மற்றும் விஷ்ணு விஜய்யின் இசையில் வெளியான பாடல்களும், காமெடி காட்சிகளுக்கு குக் வித் கோமாளியில் வருவது போல அவர் கொடுக்கும் ஃபன்னி மியூசிக்கும் தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

டைமிங் காமெடியால் தப்பிக்கும் இந்த காதல் படத்தின் தமிழ் டப்பிங் பல இடங்களில் சுமாராக இருந்தாலும், காமெடி காட்சிகளில் சிரிக்க வைத்து விடுகிறது. முதல் பாதியில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவும் எப்போது ஹீரோயினை காட்டுவார்கள் என ரசிகர்கள் ஏங்கும் இடங்களும் மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. கதை இன்னமும் வலுவாக இருந்திருக்கலாம். காதலர்கள் மட்டுமே பார்க்கும் படி உருவாக்காமல் குடும்பத்துடன் பார்க்கும்படியும் எடுத்த இடத்தில் மைனஸ் பெரிதாக தெரியாதது தான் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம். தமிழில் எந்தளவுக்கு இதற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Related Articles